விஸ்வகர்மாகுலப்பழக்கவழக்கங்கள்
விஸ்வகர்மா குலப்பழக்கவழக்கங்கள் பிறப்பு முதல் இறப்பு வரை கடைப்பிடிக்கும் முறைகளைக் குறிக்கின்றன. பழக்க வழக்கங்கள், நடத்தப்படும் சடங்குகளின் மூலம் வெளிப்படுகிறது.
குழந்தை பிறப்பு
குழந்தைப் பிறப்பு என்பது ஆண், பெண் உறவினைப் பலப்படுத்தும் ஒரு முக்கிய அங்கம் எனலாம். எல்லாச் செல்வங்களிலும் சிறப்பு உடைய செல்வம் குழந்தைச் செல்வம்,
“குழலினிதி யாழினிதென்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்”
குழந்தைக்குப் புண்யாகவாசனை செய்து பெயர்சூட்டுதல்
தீட்டுக்கழிக்கும் பொருட்டு செய்யப்படும் சடங்கே புண்யாகவாசனை. குழந்தைபிறப்பு, பெண்கள் பூப்பெய்தல், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தீட்டுக் கழிக்கும் விதமாகப் புண்யாகவாசனை செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் பொழுது ஏற்படும் கிருமிகளை அழிக்க வேள்வி நடத்தி, புண்யாகவாசனை செய்யப்படுகிறது. வழக்கத்தில் உள்ள ஒவ்வொரு சடங்கும் அறிவியல் காரணமாக ஏற்படுத்தப் பட்டவையாகும்.
குழந்தை பிறந்து மூன்று மாதத்திலோ அல்லது ஐந்து மாதத்திலோ, இருவீட்டாரும் வீட்டை வெள்ளை அடித்துச் சுத்தம்செய்த பிறகு, குழந்தைக்கும், தாய்க்கும் தீட்டுக் கழித்து பெயர் சூட்டப்படுகிறது. ஒரு சிலர் குழந்தை பிறந்து பதினாறாம்நாளில் இவ்விழாவினை நடத்துகிறார்கள்.
குழந்தைக்குச் சோறு ஊட்டுதல்
குழந்தைக்கு முதன் முதலில் சோறுஊட்டுதல் என்பது, சிறப்பான நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது குழந்தையை மூன்று அல்லது ஐந்தாம் மாதத்தில் குலதெய்வக் கோயிலுக்கு எடுத்துச் சென்ற பொங்கலிட்டுப் படையல் போட்டு இனிப்பு கலந்து உணவை ஊட்டுவர்.
மொட்டையடித்துக் காது குத்துதல்
கடவுளுக்குத் தன் அழகை அர்ப்பணித்தலே மொட்டையடித்தல் எனலாம். குழந்தையின் அழகைக் கடவுளுக்குக் காணிக்கையாக்குகின்றனர். முதலில் குலதெய்வத்திற்கே மொட்டையடித்து வழிபடும் வழக்கம், தொன்று தொட்டு இருந்து வருகிறது. குழந்தைக்கு முடியிறக்கி, காதுகுத்தினால் எமன் நெருங்கமாட்டான் என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சி உறவினர் அனைவரையும் அழைத்து விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஆண்குழந்தைக்குப் பூணூல் அணிவித்தல்
“பூணூல் அணிதல்” என்னும் சடங்கு, ஒரு ஆண் குழந்தைக்கு ஒரு வயது முதல் ஏழு வயதிற்குள் ஆயுள் வேள்வி செய்து, பதினாறு வயதிற்குள் பூணூல் போட வேண்டும், 5, 7, 9, 11, 13, 15, 16 வயதுகளில் பூணூல் சடங்கினை, விஸ்வகர்மா குலத்தினர் நடத்துவது பழக்கமாக இருந்து வருகிறது. விஸ்வகர்மா
குலத்தில் பிறந்த ஆண்குழந்தைகளுக்கு முற்காலத்தில் பூணூல் அணிவது அவசியமாக்கப்பட்டது. இத்தகைய சடங்கினையே பூணூல் கல்யாணம் எனக் குறிப்பிடுவர். விஸ்வகர்மா குலத்தினர் ஆண்குழந்தைக்குப் பூணூல் கல்யாணத்தை அப்போது எல்லாம் மிகச்சிறப்பாகக் செய்தனர். தற்காலத்தில் ஒரு சிலரே இச்சடங்கைச் செய்து வருகின்றனர்.
பதினோராவது நாளில் பெயர்வைத்தல், ஆறாவது மாதத்தில் சோறு ஊட்டுதல் (அன்னப்ராசனம்) மூன்றாம் வருடத்தில் குடுமி வைத்தல் (சூடாகருமம்), எட்டாம் வருடத்தில் பூணூல் கல்யாணம் (உபநயனம்), பதினாறாவது வயதில் வேதங்கள் கற்றல், குரு குல
வாசத்தில் வேதமொழி முடிந்தபின், ஒரு வருடம் வெள்ளை ஆடை, சந்தனம், மலர் மாலை முதலியன அணிந்து தீர்த்த யாத்திரை செய்வது, அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளுதல் என்று முன்காலத்தில், விஸ்வகர்மா ஆண்மகனுக்கு வழிமுறைகள் வைக்கப்பட்டு இருந்தது, தற்காலத்தில் இவை கடைப்பிடிக்கப்படுவதில்லை.
பூணூல் அணிந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
விஸ்வகர்மா சமூகத்தினர் பூணூலைத் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கின்றனர். பூணூல் அணிந்தவர்கள் ஆறுவேளை காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். மேலும், பூணூல் அணிந்தவர் நடைமுறைவாழ்வில் நிறைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க
வேண்டியுள்ளது. ஆகையால், தற்காலத்தில் பெரும்பாலோர் பூணூல் அணிவதில்லை. காரணம், பூணூல் அணிந்து கடைப்பிடிக்கும் செயல்களுக்குப் போதிய காலப் பற்றாக்குறை. சமூகச் சூழ்நிலையும் கூட ஒரு காரணம் என்று கூறுகின்றனர்.
மனுவுக்கு வெள்ளிப்பூணூல்,
மயனுக்குத் தாமரைநாற் பூணூல்,
துவஷ்ட்டாக்களுக்கு தாமிரத்தாலாகிய பூணூல்,
சிற்பிகளுக்குப் பருத்தி நூற் பூணூல்,
விசுவக்ஞாயிகளுக்குப் பொன்னாலாகிய பூணூல் என,
ஐந்துதொழில் செய்பவர்களும் ஐந்துவிதமான பூணூல் அணிய வேண்டும் என்று விஸ்வகர்மாகுலப் பெரியோர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம் என்னும் பண்டிகை, பூணூல் அணிதலைக் குறிக்கும், விஸ்வகர்மா குலத்தினர் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குப் பூணூல், பூசைப் பொருள்கள், பச்சைமாவு போன்றவற்றை எடுத்துச் சென்று தெய்வத்தை வணங்கிப் பூணூல் அணிந்து வருவர். ஆவணி அவிட்டம் பண்டிகையின் பொழுது நோன்பு இருந்து பச்சைமாவு உண்டு, நோன்பை முடித்துக் கொள்வார்கள்.
தெலுங்கு வருடப்பிறப்பு
பங்குனி யுகாதிப் பண்டிகை தான் தெலுங்கு வருடப்பிறப்பு, தெலுங்கு பேசும் அனைவரும் சிறப்பாக இத்திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் வேப்பம் பூ, சர்க்கரை கலந்து உண்பர். வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்து வருபவை. அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அமைய வேண்டும் என்பதற்காக, வருடத்தின் முதல் நாள் இனிப்பும், கசப்பும் கலந்து உட்கொள்கின்றனர்.
தாய்மாமன் கொடுக்கும் பாவாடை தாவணி
பெண் வளர்ந்த பிறகு, அதாவது பூப்பு எய்துவதற்கு முன் தாய்மாமன் வீட்டார், முதன் முதலில் பாவாடை தாவணி எடுத்துக் கொடுக்கும் பழக்கம் உள்ளது. உறவுகளை அழைத்து ஒன்பது அல்லது பதினொரு வகையான சீர் பொருள்கள் உள்ள தட்டுகளை வைத்து இச்சடங்கைச் செய்கின்றனர். தற்காலத்தில் விஸ்வகர்மாகுலத்தில் ஒரு சிலரே இச்சடங்கைக் கடைப் பிடித்து வருகின்றனர்.
பூப்பு எய்தல்
பூப்பு எய்தல் என்பது பெண்ணின் உடல் வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் மாறுபாடாகும். இதனைப் பெண்பருவம் அடைதல்”, வயதுக்கு வருதல், பூப்பு எய்தல் என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட வயது ஆனவுடன், பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தாய்மை அடையக் கூடிய உடல் தகுதியினைப் பெறுகிறாள். மேலும் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை பூப்பு அடைந்தால், குடும்பத்திற்கு நன்மை என்றும் நம்புகின்றனர்.
பூப்படைந்த பெண் தனிமைப் படுத்தப்பட்டு வாழும் கட்டம். அவளது வாழ்க்கையில் சிறுமி என்ற பருவத்திலிருந்து, பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய முழு வளர்ச்சியடைந்த மங்கை என்ற கட்டத்திற்குப் படிப்படியாக ஆயத்தம் செய்யும் கட்டம். விலக்குகள் பண்டைய மனிதனின் எழுதப்படாச் சட்டங்கள் என்றும், கடவுள், சமயம் போன்ற நம்பிக்கைகள் தோன்றுவதற்கு முன்பே விலக்கு பற்றிய நம்பிக்கைகள் பெரும்பாலும் தோன்றி விட்டன என்றும் கூறுவர்.
குடிசை கட்டுதல்
குடிசை கட்டுதல் என்பது பச்சைத் தென்னை ஓலைகளைக் கொண்டு குடிசை போல் கட்டுதல் எனலாம். பெண் பூப்பு அடைந்த அன்றைக்கோ அல்லது மூன்றாவது நாளோ குடிசை கட்டுவர். பூப்படைந்த ஐந்து நாள் வரை, வண்ணான் துணி உடுத்தக் கொடுக்கின்றனர். தாய்மாமன் தான் பச்சை ஒலை பின்னிக் குடிசை அமைத்துத் தர வேண்டும். தாய்மாமனுக்கு ஒலை பின்னத் தெரியவில்லை என்றால், தெரிந்த மற்றவர்களும் சேர்ந்து பின்னுவர். பாலக் குச்சி கொண்டு வந்து மஞ்சள் துணியில் ஒன்னேகால் ரூபாய் நாணயமும், நவதானியங்களையும் இட்டு, பாலக்குச்சியில் கட்டி பாலக்குச்சியை குடிசையின் ஈசானிப் பக்கத்தில் கட்டப்படுகிறது.
மேலும், குடிசையின் எல்லாப் பக்கங்களிலும் வேப்ப இலைகள், புங்கன் இலைகளை நிறையச் சொருகுவர். ஓலை, இலைகள் காயக் காய அதில் இருந்து வெளியேறும் ஒருவித இரசாயன வாயு, பருவம் அடைந்த பெண்ணின் உடல்நலத்திற்கு நன்மையை உண்டாக்கும். ஆகையால் பருவம் அடைந்த பெண்களைப் பச்சைக் குடிசையை விட்டு வெளியில் வராமல் வைத்திருக்கின்றனர்.
அரிசிமாவு, எள்ளுமாவு, தினைமாவுடன் பனைவெல்லம் கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்து. விருந்தில் வைக்கப்படுகிறது. இந்தமாவு உருண்டைகள் பூப்பு எய்திய பெண்ணின் உடலுக்கு நல்லது. பச்சைமுட்டை, உளுத்தம்பருப்புக் கஞ்சி, வடைபோன்றவற்றைக் கொடுப்பதால், பெண்ணின் கருப்பை வலுவடைகிறது. விஸ்வகர்மா குலத்தினர் பூப்புச் சடங்கினை இன்றும் சிறப்பாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
தீட்டுக்கழித்தல் (புண்யாவாசனை)
பச்சைக் குடிசை கட்டிய ஐந்து, ஒன்பதாம் நாளில் குடிசையைக் களைந்துஅதனை எரிப்பர். அதன் பின்னர் வீட்டிற்கு வெள்ளையடித்துச் சுத்தம் செய்து, பதினாறாம் நாள் நெருங்கிய உறவுகளை அழைத்து, தாய்மாமன் வீட்டார் புதிய ஆடை, மற்றும் இனிப்பு வகைகள் அடங்கிய தட்டுகளைக் கொண்டு வருவர்.
புரோகிதர் யாகசாலை அமைத்து மந்திரம் சொல்லி தீட்டுக் கழித்து, புண்யாவாசனைக்குப் பிறகு, பூப்பு எய்திய பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் செல்வது, வழக்கமாகும்.
சீர்வாங்குதல்
சீர்வாங்குதல் என்பதனைத் தலை சுற்றுதல் எனலாம். பெண் பருவமடைந்து ஒன்று, மூன்று, ஐந்து மாதங்களில் சீர்வாங்குதல் என்னும் சடங்கை நடத்துகின்றனர். செய்த சீர்வரிசைகளைத் திரும்பப் பெறும் நோக்கத்துடன் செய்யும் சடங்கு, சுமங்கலிப் பெண்கள் நலுங்கு வைப்பர். இச்சடங்கைச் சிலர் திருமணத்திற்கு முதல் நாள் நடத்துவர். ‘நலுங்கு’ என்பது ‘கண்ணேறுகழித்தல்’ என்பதனுள் ஒரு வகையாகும். அழகுபடுத்தப்பட்டபெண்ணை, அனைவரும் பார்க்கும் பொழுது கண்பட்டுவிடும் என்ற நம்பிக்கையின் காரணமாக, இந்தநலுங்கு என்ற சடங்கை நடத்துகின்றனர்.
கண்ணேறு கழித்தல்
மனிதர்களின் கண்பார்வைக்கு ஒருசக்தி உண்டு. அப்பார்வை நன்மையும்செய்யும்; தீமையும்செய்யும். தீய பார்வை உடையோரின் கண்பட்டால் அழிவுகள் நேரும்.
‘கல்லடிபட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது’,
‘கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பமுடியாது’
என்ற பழமொழிகள் உண்டு.
“கண்ணான கண்ணுக்கு என் ஐயா
உனக்குக் கண்ணேறு வராமல்
சுண்ணாம்பு மஞ்சளும் சித்த நெறி சூரியர்க்கு”
என்று நாட்டுப் புறப்பாடல் ஒன்று கூறுகிறது. நாட்டுப் புறமக்களிடம் நிலவி வரும் பல நம்பிக்கைகள், தற்காலத்தில் நகர்ப்புறமக்களிடம் இல்லை. அறிவியல் முன்னேற்றமும், பகுத்து அறியும் சிந்தனையும், மக்களிடம் நம்பிக்கையைக் குறைத்துள்ளது. எனினும் வாஸ்து பார்த்தல், நாள், நட்சத்திரம் பார்த்தல், சாதகம் பார்த்தல் போன்றவை நிலவி வருகிறது.
நவ தானியங்களால் குளிப்பாட்டுதல்
நவ என்பது ஒன்பது. ஒன்பது தானியங்கள் நவதானியம் எனப்படும். அனைத்துச் சுபகாரியங்களுக்கும் நவதானியங்களைப் பயன்படுத்துவதன் நோக்கம், அதில் உள்ள அபூர்வ சக்தி தான் காரணம். தானியங்கள் தனித்தனியாக இருக்கும் பொழுது, உண்பதற்கு மட்டுமே பயன்படுகிறது. ஒன்பது தானியங்களையும் ஒன்று சேர்க்கும் போது அதற்குத் தனி சக்தி வந்து விடுகிறது,
ஒன்பது வகையான தானியங்களைக் கலந்து, சல்லடையில் இட்டுப் பெண்ணின் தலையின் மேல் வைத்து, ஐந்து அல்லது ஒன்பது குடம் மஞ்சள் கலந்து நீரை ஊற்றுகின்றனர். நவ தானிய சக்தி பெண்ணின் உடலில் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்துகிறது.
பூப்படைந்த பெண்ணுக்குப் புனிதநீராட்டு நடைபெறுகிறது, பூப்புக்காலத்தில் அவள் உடல் அடைந்த மாசுகளை நீக்கித் தூய்மைப் படுத்துவதாகும்.
திருமண முறைகள்
விஸ்வகர்மா குலத்தவர்கள் குலம், கோத்திரத்தின் அடிப்படையில் திருமணம் செய்கின்றனர். இவர்கள் முற்காலத்தே ஒரு மாத காலம் திருமணச் சடங்குகள் செய்ததாகக் கூறப்படுகிறது. அது ஒரு வாரமாகக் குறைந்து இன்று காலச் சுருக்கத்தின் காரணமாக, இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. சிலர் ஒருநாள், ஒருவேளையில் முடித்துவிடுகின்றனர்.
பெண்பார்த்து உறுதிசெய்தல்
மணமகன் வீட்டார், பெண்ணைப் பார்த்துப் பிடித்த பின்னர், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து இந்தப் பெண் இவனுக்கு என்று உறுதி செய்வர். பின் திருமணத்திற்கு பத்திரிகை, வெற்றிலை பாக்கு, பணம் வைத்து மாமன் முறை உள்ளவர்களை அழைக்கின்றனர். விஸ்வகர்மா குலத்தவர்கள் திருமணத்திற்கு முதல்நாளும், திருமணத்தன்றும் பலவகையான சடங்குகள் செய்கின்றனர்.
திருமணத்திற்கு முதல் நாள் செய்யும் சடங்குகள்
விஸ்வகர்மா குலத்தவர்கள் திருமணத்திற்கு முதல்நாளே சடங்குகளைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
குலதெய்வ வழிபாடு.
மணமகனை அழைத்தல்.
மணவறை அலங்காரம்செய்தல்.
பஞ்சகன்னிகைகளுக்குக் கங்கணம் கட்டுதல்.
மாப்பிள்ளைக்கு முகச்சவரம் செய்து குளிப்பாட்டல்.
குயவரிடம் மண்பானை மற்றும் பஞ்சபாலிகை மண்பானை வாங்குதல்.
புத்துமண் கொண்டு வருதல்.
அரசங்கொம்பு கொண்டு வருதல்.
பஞ்ச கங்காதீர்த்தம் கொண்டுவருதல்.
அரண்மனை சோதி வைத்தல்.
முகூர்த்தக்கால் நடுதல்.
பால்தொட்டு ஆசீர்வதித்தல்
போன்ற சடங்குகளை முதல் நாள் செய்வர்.
திருமணத்தன்று நடைபெறும் சடங்குகள்
விஸ்வகர்மா குலத்தில், திருமணத்தன்றும் நிறைய சடங்குகளைச் செய்கின்றனர். திருமணத்தன்று அதிகாலை நான்கு மணி முதல் சடங்குகள் செய்யத் தொடங்குவர்.
மணமக்களுக்குக் கங்கணம் கட்டுதல்.
மஞ்சள் ஆடைகள் ஆசீர்வதித்துக் கொடுத்தல்.
பஞ்சபாலிகை போடுதல்.
பாதபூசை செய்தல்.
தாரைவார்த்துக் கொடுத்தல்.
மணமகன் பரதேசம் போதல்.
மணமகனுக்குப் பூணூல் போடுதல்.
மாங்கல்யத்தைத் தொட்டு வணங்குதல்.
சீரகமும், வெல்லமும் கொடுத்தல்.
மாங்கல்யம் அணிவித்தல் (தாலிகட்டுதல்),
மாலைமாற்றிக் கொள்ளுதல்.
மணவறையைச் சுற்றுதல்.
அம்மி, மிதித்து அருந்ததி பார்த்தல்.
பால், பழம் சாப்பிடுதல்.
நாகவல்லி,
சம்பந்தம் கலக்குதல்
போன்ற சடங்குகளைத் திருமணத்தன்று செய்கின்றனர்.
தாலி மாற்றுதல்
“தாலி மாற்றுதல்” என்பது நூல் கயிற்றில் பெருந்து, தாலிக்கயிற்றுக்குமாங்கல்யத்தைமாற்றுதல், மூன்று, ஐந்தாம் மாதத்தில் இச்சடங்கை நடத்துவர். கருவுற்றிருந்தால் செய்யமாட்டர்கள். குழந்தை பிறந்த பிறகு தான் தாலிக் கயிற்றை மாற்றுவர். திருமணத்தன்று மாங்கல்யம் மட்டும் ஆண்வீட்டார் அணிவிப்பர். தாலி மாற்றுதலின் போது குண்டு, காசு, நாணல் போன்ற தங்கத்தால் ஆன பொருள்களைப் பெண்வீட்டார் செய்து கொண்டுவருவர். விஸ்வகர்மா குலத்தினர் நெருங்கிய உறவுகளை அழைத்துச் சிறப்பாக இச்சடங்கினைச் செய்கின்றனர்.
வளைகாப்பு (கட்டிச்சாதவிருந்து)
வளைகாப்பு என்பது பெண்ணின் வாழ்க்கையில் உணர்வுப் பூர்வமாக மகிழ்ச்சி அடையும் ஒரு சிறப்பான நிகழ்ச்சி. ஒரு பெண்ணைத் தாய்மைக்குத் தகுதியுடையவளாக அங்கீகரிக்கும் மாற்றமே எனலாம்.
வளைகாப்பு கைநிறைய வளையல் அணிவிப்பது. கட்டுச்சாதவிருந்து, பலவகையான சோற்றைக் கட்டிவைத்து வழிபடும் சடங்கு. இரண்டும் ஒன்றே. கருவுற்ற மாதத்தில் ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் உறவை அழைத்து இச்சடங்கைச் செய்வார்கள்.
விஸ்வகர்மா குலத்தினர் மிகச் சிறப்பாக இச்சடங்கை நடத்துகின்றனர். ஐந்து, ஒன்பது வகையான சோறு செய்து, ஒரு வெள்ளைத் துணியில் தனித்தனியாக மூட்டை கட்டிவைப்பர். துவையல், இனிப்பு வகைகளை வைத்து வழிபட்டுப் பிறகு வேப்பம் இதழ்களில் உள்ள இலையை உருவி விட்டு, தண்டுப் பகுதியைச் சேர்த்து வளையல்கள் மாதிரி, இரண்டு செய்து முதலில் இவ்வளையலை அணிவிக்கின்றனர். கிருமிகள் கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்காமல் இருக்க, வேப்பவளையல்களை அணிவிக்கின்றனர்.
அதன் பின்னர் சிலர் தங்க வளையல்களை அணிவிப்பர். சுமங்கலிப் பெண்கள் வளையல் அணிவித்த பின்னர், அங்கு உள்ள அனைத்துப்
பெண்களுக்கும் வளையல், பூ, வெற்றிலைபாக்கு, மஞ்சள் கொடுப்பார்கள்.
பொருத்தம் பார்த்தல்
மணமுடிக்க வேண்டிய ஆணிற்கும், பெண்ணிற்கும் முதலில் பொருத்தம் பார்க்கின்றனர். ஆணை விடப் பெண் வயதில் இளையவராக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ‘பொருத்தம்பார்த்தல்’ என்பது, மொத்த நட்சத்திரங்கள் இருபத்து ஏழு, பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி, வரும் கூட்டுத் தொகை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் பொருத்தம் என்று சோதிட நூல் கூறுகிறது.
நட்சத்திரங்கள்
1. அஸ்வினி 2. பரணி 3. கார்த்திகை 4. ரோகினி
5. மிருகசீரிஷம் 6. திருவாதிரை 7. புனர்பூசம் 8. பூசம்
9. ஆயில்யம் 10. மகம் 11. பூரம் 12. உத்திரம்
13. அஸ்தம் 14, சித்திரை 15. சுவாதி 16, விசாகம்
17. அனுசம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம்,
21. உத்திராடம் 22. திருவோணம் 23, அவிட்டம் 24. சதயம்
25. பூரட்டாதி 26. உத்திரட்டாதி 27. ரேவதி
ஆண்வீட்டார், பெண்வீட்டார் இருவரும் ஆண், பெண் இருவரின் பிறப்பு நேரத்தை வைத்து, நட்சத்திரம் பொருத்தம் பார்த்த பிறகு, மேலும் பத்துப் பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது.
பொருத்தங்கள்
பொருத்தங்கள் பத்து உள்ளன. அவை தினப் பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், பக்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம் (அதாவது) மிருகப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசிஅதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரச்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் போன்ற பத்துப் பொருத்தங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏழுக்குமேல் பொருந்தினால், நன்று எனத் திருமணம் செய்யப்படுகிறது.
ஐந்திற்குக் குறைவாகப் பொருத்தம் இருந்தால், திருமணம் செய்ய மறுக்கின்றனர். இவை அல்லாமல் ஆயுள் பொருத்தமும் பார்க்கின்றனர்.
ஐந்து பொருத்தத்திற்கு குறைவாக இருப்பின் ஆண், பெண் இருவீட்டாரும் திருமணம் செய்ய விருப்பம் என்றால், சகுனம், வடிவம் (திருவுளம்) பூக்கேட்டல் போன்றவை சுபமாக இருப்பின், ஆண்வீட்டாரும், பெண்வீட்டாரும், ஆணுக்கும் செய்யலாம் என்று சோதிட அறிஞர்கள் கூறியுள்ளனர். பெண்ணுக்கும் மனம் ஒத்துக்கொண்டால், திருமணம் செய்யலாம் என்று ஜோதிட அறிஞர்கள் கூறியுள்ளனர்.
திருமணம் செய்வதற்கு உரிய நட்சத்திரங்கள், திதிகள், கிழமைகள், லக்கனங்கள்
திருமணம் செய்வதற்கு நட்சத்திரங்கள், திதிகள், கிழமைகள், லக்கனங்கள் போன்றவற்றைப் பார்த்து நிர்ணயித்த பின்னர் பத்திரிகை எழுதப்பட வேண்டும்.
நட்சத்திரங்கள்
திருமணம் செய்வதற்கு உரிய நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம்ரோகிணி, ரேவதி, மிருகசீரிஷம், அனுசம், மூலம், இந்தப் பத்து நட்சத்திரங்களும் சிறப்புடையது எனக் கூறப்படுகிறது.
திதிகள்
துதியை, திவிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி என்று சொல்லப்படும் திதிகள், சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சத்தில் பஞ்சமி சிறப்புடையது என்றும், சதுர்த்தி, தசமி, தூவாதசி,சதுர்தசி, பௌர்ணமி இந்தத் திதிகள் ஓரளவு பொருத்த முடையவை என்றும், பிரதமை, சஷ்டி, அஷ்டமி, நவமி, அமாவாசை இந்தத் திதிகள் சிறப்புடையது அல்ல என்றும், சிறப்புடைய திதிகளில் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
கிழமைகள்
ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி. இந்தக் கிழமைகளில் திருமணம் செய்வது நல்லது எனக் கருதித் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
லக்கனங்கள்
மிதுனம், கடகம், கன்னி, துலாம், மீனம், இந்த லக்கனங்கள் சிறப்புடையது என்றும், ரிஷபம், தனுசு,மகரம் இந்த லக்கனங்கள் ஓரளவு சிறப்புடையது என்றும், மேஷம், சிங்கம், விருச்சிகம், கும்பம் இந்த லக்கனங்கள் சிறப்புடையது அல்ல என்றும் கருதி
இச்சிறப்புடைய லக்கனங்களில் திருமணம் நடத்தி வருகின்றனர்.